×

தெருவோர சிறுவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட்

உலகெங்கிலும் உள்ள தெருவோர சிறுவர், சிறுமிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ‘சேவ் தி  சில்ட்ரன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தெருவோர குழந்தைகளுக்கான 2வது உலக கோப்பை  கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளது. இந்தியாவில் 2023,  செப்டம்பர் மாதம் 10 நாட்கள் இந்தப் போட்டி நடக்கும். 16 நாடுகளை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்க உள்ளன. 2019ல் நடந்த முதல் உலக கோப்பையில், போட்டியை நடத்திய இங்கிலாந்தை வீழத்தி இந்தியா (தெற்கு) கோப்பையை வென்றது.

* விடுப்பு எடுத்து போராட வாங்க
கடும் பொருளாதார வீழ்ச்சியால் தவிக்கும் இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான அர்ஜூனா ரணதுங்கா, ‘ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் ஒரு வாரம் விடுப்பு எடுத்து மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

* வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு
குஜராத்துக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் வீசிய 3 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்நிலையில், பயிற்சியாளர் டாம் மூடி, ‘சுந்தர் வலது கையில் கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் சவ்வு கிழிந்துள்ளது. காயம் சரியாக ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் தேவைப்படலாம்’ என்று கூறியிருந்தார். எனவே சன்ரைசர்ஸ் அடுத்து விளையாட உள்ள 2 லீக் ஆட்டத்தில் சுந்தர் விளையாட மாட்டார். திவாதியாவுக்கு பெரிய காயமில்லை என்பதால் அவர் அடுத்த ஆட்டத்தில் பங்கேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

* ஆஸி.யில் காமன்வெல்த்
காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் இந்த ஆண்டு ஜூலை 28 - ஆக.8 வரை 22வது காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளது. அடுத்து 2026ல் 23வது போட்டியை எந்த நாடு நடத்துவது என்பதை குறித்து முடிவு செய்ய பிப்ரவரி மாதம் வாய்ப்பு வழங்கப்பட்டது. எந்த நாடும் ஆர்வம் காட்டாத நிலையில் ஆஸ்திரேலியா முன்வந்தது. இந்த தொடர் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறும் என்று ஆஸ்திரேலியா நேற்று உறுதி செய்தது. ஆஸி. ஏற்கனவே 1938, 1962, 1982, 2006, 2018ல் ஏற்கனவே  காமன்வெல்த் போட்டியை நடத்தியுள்ளது. இனி 7வது முறையாக நடத்த உள்ளது.

* விலகினார் தீபக் சாஹர்
சென்னை அணி, மெகா ஏலத்துக்கு முன்பாக வேகம் தீபக் சாஹரை விடுவித்தது. ஏலத்தில் ரூ.14 கோடிக்கு மீண்டும் வாங்கியது. காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியில் இருந்தவரை இத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆச்சர்யத்தை கொடுத்தது. விரைவில் குணமாகி களமிறங்கத் தயாராகி விடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் நம்பியது. இந்நிலையில், பயிற்சியின்போது முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால்  நடப்பு சீசனில் இருந்து சாஹர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இதுதான் முதல் முறை
ஆசிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான ஏஎப்சி ஏசியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் பி-பிரிவில் இந்தியாவின் ஐஎஸ்எல் அணியான மும்பை சிட்டி எப்சியும், ஈராக்கின் முன்னணி கிளப்பான  ஏர் போர்ஸ் கிளப் (அல்-குவா அல்-ஜாவியா) அணியும் மோதின. அதில் மும்பை 2-1 என்ற கோல் கணக்கில் ஏர் போர்ஸ் அணியை அதிரடியாக வீழ்த்தியது. அதன் மூலம்  ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரில் வென்ற முதல் இந்திய அணி என்ற பெருமையை மும்பை சிட்டி எப்சி பெற்றுள்ளது.

* பயிற்சி தருகிறார் ஒலிம்பியன் பாஸ்கரன்
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஒலிம்பியன் வி.பாஸ்கரன். இவரது பாஸ்கரன் உயர் செயல்பாட்டு அகடமியும், ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விளையாட்டு மையமும் இணைந்து கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் ஏப்.19ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை நடைபெறும். முகாமில்  10-16 வயது  மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பாஸ்கரன் உட்பட பிரபல பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். முகாமில் சேர விரும்புவோர் மேலும் தகவல் அறிய: 94442 71202.


Tags : World Cup , World Cup cricket for street boys
× RELATED சில்லி பாயின்ட்…