×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,806 சிறப்பு பஸ்கள்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை வழித்தடத்தில் 932 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 2,806 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 15ம் தேதி பின்னிரவு 2.32 மணிக்கு தொடங்கி, 16ம் தேதி பின்னிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சித்ரா பவுர்ணமியன்று தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், எஸ்பி பவன்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும். பொது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், மினிலாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வடக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், 2,806 சிறப்பு பஸ்கள் 6,086 நடைகளும், 201 தனியார் பஸ்கள் 509 நடைகளும் இயக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

குறிப்பாக, சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், சிறப்பு பஸ்கள் அனைத்தும் வரும் 16ம் தேதி அதிகாலை முதல் 17ம் தேதி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி இரவு முதல் 17ம் தேதி வரை நகருக்குள் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 9 இடங்களில் அமையும் தற்காலிக பஸ் நிலையங்கள் வரை சிறப்பு பஸ்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கார், வேன் நிறுத்துவதற்காக நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் 45 பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Chitra Pavurnami Girivalam ,Thiruvannamalai , 2,806 special buses to Chitra Pavurnami Girivalam in Thiruvannamalai: 4,000 police on security duty
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...