×

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மனுக்கு நேற்றிரவு பட்டாபிஷேகம் நடந்தது. இன்று திக்கு விஜயம் நடக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து ஊடல் லீலை நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு 8.35 மணிக்கு, அம்மன் சன்னதியில்  உள்ள ஆறுக்கால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில், மீனாட்சியம்மன் ராயர் கிரீடம் சூட்டி, வேப்பம்பூ மாலை அணிந்து, ராணி அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.

அப்போது நவரத்தின செங்கோல் வழங்கப்பட்டு, பட்டத்து ராணியாக பட்டாபிஷேகம் நடந்தது. அம்மனிடம் செங்கோலை பெற்று தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் மேளதாளம் முழங்க வலம் வந்தார். பின்னர் மீண்டும் மீனாட்சியம்மனிடம் செங்கோலை ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. பின்னர் பட்டத்து இளவரசியாக மாசி வீதிகளில் இரவு வலம் வந்தார். மீனாட்சியம்மன் அரசியாக மகுடம் சூடியதை தொடர்ந்து, நேற்று முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியம்மன் ஆட்சி நடக்கிறது. ஒன்பதாம் திருநாளான இன்று அம்மனின் திக்கு விஜயம்  நடக்கிறது. இதற்காக இன்றிரவு மாசி வீதிகளில் அம்மன் வலம் வந்து, எட்டுத்திக்கும் போரிடுவார். மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. 15ம் தேதி தேரோட்டம்  நடக்கிறது.

Tags : Meenakshi ,Madurai Chithirai Festival , Pattabhishekam to Meenakshi at Madurai Chithirai Festival
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...