×

பயணம் செய்த ரயிலில் புகை வந்ததால் பீதி தப்பி ஓட முயன்ற 5 பேர் எக்ஸ்பிரஸ் மோதி பரிதாப பலி: இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் திடீரென புகை வந்ததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியடித்து தண்டவாளத்தை கடந்து ஓட முயன்றனர். இதில் அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். கோவையில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக, அசாம் மாநிலம் சில்சர் என்ற நகரத்திற்கு செல்லும் சில்சர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் நேற்றுமுன்தினம் புறப்பட்டது.  அன்று இரவு 8.30 மணியளவில் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜி.சிகடம்-படுவா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் இருந்து புகை வந்தது.

இதை பார்த்து அச்சமடைந்த பயணிகளில் சிலர் அபாய சங்கிலியை இழுத்தனர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நின்றவுடன் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து ஓட முயன்றனர். அப்போது, அவ்வழியாக புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி சென்ற கோனார்க் எக்ஸ்பிரஸ் பயணிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 பயணிகள் உடல் சிதறி இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டு ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சடலங்களை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆந்திராவில் ரயில் மோதி 5 பேர் பலியானது குறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் படுகாயம் அடைந்து ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்  நிவாரண உதவியை அறிவித்து முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்களில் 2 பேர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களது பெயர், விவரம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Andhra ,Pradesh ,Chief Minister ,Jaganmohan , Five killed in train collision Express crash kills five Order of Andhra Pradesh Chief Minister Jaganmohan
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்