ஜார்கண்ட் மாநிலத்தில் விபத்து ரோப்காரில் சிக்கிய எல்லா சுற்றுலா பயணிகளும் மீட்பு: ஹெலிகாப்டரில் இருந்து விழுந்து பெண் பலி

தியோகர்: ஜார்கண்டில் ரோப்கார் விபத்தில் சிக்கிய அனைத்து சுற்றுலா பயணிகளும் நேற்று மீட்கப்பட்டனர். ஏற்கனவே, இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மீட்பு பணியின்போது ஹெலிகாப்டரில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் திரிகூட மலையில் அமைந்திருக்கும் பாபா வைத்தியநாத் கோயிலுக்கு ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் மிகவும் உயரமான வழித்தடமாகும். மொத்தம் 766 மீட்டர் நீளத்துக்கு ரோப்கார் இயக்கப்படுகிறது. கடந்த ஞாயிறன்று மாலை 2 ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அவற்றில் இருந்த சுற்றுலா பயணிகள் அந்தரத்தில் சிக்கினார்கள்.

இதனை தொடர்ந்து, விமானப்படையினர், ராணுவம், இந்தோ-திபெத் எல்லை போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டோர்  மீட்கப்பட்டனர். நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. 15 பேரில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்பு பணியின் போது ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த சோபாதேவி (60) என்ற பெண் உயிரிழந்தார். நேற்று முன்தினமும் மீட்பு பணியின்போது ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட, மொத்தம் 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 40 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிகள் நேற்று முடிந்தது.

Related Stories: