திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 இடங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தாம்பரம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் முன்சீப் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையையொட்டிய புறநகர் பகுதியான திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, ஒன்றியம் மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ளது. திருப்போரூர், மானாம்பதி, தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களிலும், துரைப்பாக்கம், கண்ணகி நகர், நீலாங்கரை ஆகிய சென்னை காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

கைதிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்லுதல், தினமும் காவல் நிலையம் சென்று அங்கிருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் செல்லுதல் போன்ற காரணங்களால் போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் கடந்த 2012ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சட்டமன்ற தொகுதி தலைமையிடமாகவும், தாலுகா தலைமையிடமாகவும் விளங்கும் திருப்போரூரில் நீதிமன்றம் அமைந்தால் 8 காவல் நிலைய வழக்குகள் இங்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய புதுப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருப்போரூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற அறிவை பெறுவதற்கு பேருதவியாக இருக்கும் என சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: