×

வெற்றிக்கணக்கை துவங்குமா சென்னை சூப்பர்கிங்ஸ்?

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடக்கும் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை துவங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டு தத்தளித்து வருகிறது. கடைசியாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.  

முந்தைய 3 ஆட்டங்களில் 0, 1, 1 ரன்களில் நடையை கட்டிய அவர் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். அத்துடன் மற்ற வீரர்களும் பதற்றமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியமானதாகும். வெற்றிக்கணக்கை தொடங்காத சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி கூறுகையில், ‘புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவை அணியில் உள்ள அனைவரும் உயர்வாக மதிப்பதுடன் நல்ல ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர் தனது பணியை நன்றாகவே செய்து வருகிறார்.

நாங்கள் சில வெற்றிகளை பெற்றால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் நெருக்கடியின்றி செயல்பட முடியும் என நம்புகிறேன். நாங்கள் விரைவில் வெற்றிகளை பெறுவோம்’ என்றார். டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. அதன் பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. அந்த அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத், விராட்கோஹ்லி ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். தினேஷ் கார்த்திக், முதல் ஆட்டத்தில் ஆடிய மேக்ஸ்வெல் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.

அந்த அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேலின்(6 விக்கெட்) சகோதரி மரணம் அடைந்ததால் அவர் அணியின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு (பயோ பபுள்) வளையத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இது பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. வலுவான நிலையில் இருக்கும் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றிக்கணக்கை துவங்க முடியும். அதே நேரத்தில் பெங்களூரு அணியும் தொடர் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags : Chennai Super Kings , Will Chennai Super Kings start the winning streak?
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...