×

குஜராத் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சன்ரைசர்ஸ்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் நேற்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (7) மற்றும் மேத்யூ வேட்  (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  சாய்சுதர்சன் 11 ரன்னிலும், மந்தமாக ஆடிய டேவிட் மில்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குஜராத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாமர்த்தியமாக ஆடினார்.

அவருடன் அபினவ் மனோகரும் சிறப்பாக ஆடி 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் 42 பந்தில் 50 ரன் எடுத்தார். குஜராத் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். அபிஷேக் ஷர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த வில்லியம்சன், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 17 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியால் கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் கேப்டன் கேன்வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “7-10 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் எனக் கருதுகிறோம். அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். பந்துவீச்சில் சிறப்பாகத்தான் செயல்பட்டிருந்தோம். உம்ரான் மாலிக்கிற்கு எதிராக பெரிய ஷாட்களை ஆட முற்பட்டேன். அப்போது இவரது பந்து ஒன்று எனது ஹெல்மெட்டில் பட்டப் பிறகு சற்று நிதானமாக விளையாடினேன். அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். தவறுகளில் இருந்து பாடம் கற்று, நாங்கள் அடுத்த போட்டியில் உத்வேகத்துடன் திரும்பி வருவோம்” எனக் கூறினார்.

Tags : Sunrisers ,Gujarat , Sunrisers put an end to Gujarat's victory
× RELATED சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு