×

அரக்கோணம் அருகே போலி ஆவணம் தயாரித்து அபகரித்த சொத்தை மீட்டுத்தர வேண்டும்-மண்பாண்டம் தொழிலாளி கலெக்டரிடம் மனு

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே போலி ஆவணம் தயாரித்து அபகரித்த சொத்தை மீட்டுத்தர வேண்டும், என்று மண்பாண்டம் தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டது.
இதில், அரக்கோணம் தாலுகா ஆட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்டம் செய்யும் தொழிலாளி தட்சணாமூர்த்தி(89) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 1994ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் 792 ச.மீ வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அனுபவித்து வருகிறேன். எனது நிலத்திற்கு அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான 9அடி அகலம், 100 அடி நீளம் கொண்ட காலிமனையை 2001ம் ஆண்டு வாங்கி நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் எனது சொத்தை கூட்டுப்பட்டாவாக மாற்றியும், அதனை விஏஓ மேற்கண்ட நபருக்கு சொந்தம் என்றும் பொய்யான சான்றிதழ் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், மோசடியாக ஆவணங்கள் தயாரித்ததை தெரிந்து மேற்படி நபர் சட்ட சிக்கலில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அரக்கோணம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. எனவே, சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வாலாஜா தாலுகா மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக மனம் திருந்தி வாழ்ந்து வருகிறோம். மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இலவச கறவை மாடு வாங்குவதற்கும் மனு அளித்திருந்தோம். பல மாதங்கள் ஆன நிலையில், எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை. வறுமையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

வாலாஜா தாலுகா பூட்டுத்தாக்கு அண்ணாநகரைச் சேர்ந்த விஜயலட்சுமி(30) அளித்த மனுவில், ‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு(13) கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அடிக்கடி இழுப்பு வருகிறது. எனவே, எனது மகளின் மருத்துவ செலவிற்கும், அவளின் வாழ்வாதாரத்திற்கும் உதவித்தொகை வழங்கி உதவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.  
நெமிலி தாலுகா வேட்டாங்குளம் கிராம விவசாயிகள் அளித்த மனுவில், ‘எங்களது கிராமம் வழியாக செல்லும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்காக 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நில எடுப்பு செய்யப்பட்ட விவசாய நிலத்தில் உள்ள மரங்கள், பம்ப் செட், பைப்கள், கிணறு ஆகியவற்றுக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து. 5 இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு விபத்து மற்றும் நிவாரண உதவித்தொகையாக ₹2.55 லட்சம் உதவித்தொகையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், டிஆர்ஓ குமரேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Tags : Arakkonam , Ranipettai: A pottery worker has demanded the recovery of a forged document near Arakkonam.
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது