×

புது தலைவலி... உக்ரைனை தொடர்ந்து நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்த பின்லாந்து... ரஷ்யா கடும் எச்சரிக்கை!!

மாஸ்கோ : நேட்டோவில் சேர முயன்றதாக கூறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்து இருக்கும் நிலையில், மேலும் ஒரு ஐரோப்பிய நாடும் நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பது ரஷ்யாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது 48வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, துறைமுக நகரான மரியுப்போலை முற்றுகையிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தேவாலயங்கள் என ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதுவும் தப்பவில்லை. திரும்பும் திசையெல்லாம் கட்டிட குவியலாக காட்சியளிக்க மரண ஒலி போரின் அவலத்தை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

உக்ரைனின் 86 ராணுவ தளங்களை ஏவுகணைகளை வீசி அழித்திருப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனின்  ஏவுகணை தாக்குதலையும் முறியடித்துவிட்டதாக கூறியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனை தொடர்ந்து பின்லாந்தும் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுவதால் அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த நடவடிக்கை ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது எனவும் நேட்டோ மோதலை நோக்கிய ஒரு கருவியாகவே உள்ளது எனவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
 உக்ரைன் போருக்கு பிறகு நேட்டோ அமைப்பில் சேரும் முடிவில் பின்லாந்து மக்கள் 60% பேர் ஆர்வம் காட்டி உள்ளதாக பின்லாந்து கூறியுள்ளது. பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப் பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா வேண்டாமா என்பதைப் பின்லாந்து எம்.பி.க்கள் முடிவு செய்ய உள்ளனர்.

Tags : Finland ,NATO ,Ukraine ,Russia , Ukraine, NATO, Finland, Russia, warning
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...