×

திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 10 அரசு கல்லூரிகள்: அமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு:
* அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் 13,075 ச.மீ பரப்பில் தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகளுடன் கூடிய நவீன விடுதி ₹49.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ₹30 கோடியில் கட்டப்படும்.
* பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் ₹10 கோடி மதிப்பீட்டில் மகளிர் விடுதி கட்டப்படும்.
* அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் டிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 11 மையங்கள் ₹10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பரிவு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ₹6 கோடி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும்.
* தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்துகொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் பொறியியல் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும்.
* முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி பூங்கா ₹50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்களிக்கப்படும்.
* 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும்.
* 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
* சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக முதுகலை படிப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் முதுகலை வணிகவியல் பாடப்பிரிவு 2022-23ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ₹1000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஆகிய இடங்களில் ₹166.50 கோடி மதிப்பீட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.
* முதலமைச்சர் 25.1.2022 அன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தொடங்கி வைத்தார். ₹10 கோடி மதிப்பிலான ஆளில்லா விமானங்களை சொத்து மூலதனமாக வைத்து இக்கழகம் தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் விரிவுபடுத்த ₹5 கோடி அரசால் வழங்கப்படும்.

Tags : Trichy ,Villupuram ,Kanchipuram , 10 new government colleges in districts including Trichy, Villupuram and Kanchipuram: Ministerial announcement
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...