×

மணலி புதுநகரில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் துப்பாக்கிமுனையில் கைது

சென்னை: மணலி புதுநகர் பகுதிகளில் 100, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அக்கம்பக்கத்தினர் நேற்று மாலை மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் கூலிப்படைகள் தங்கி இருப்பார்களோ என்ற அச்சத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கிகளுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக, வீட்டுக்குள் சென்றபோது 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. உடனே அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வீட்டிற்குள் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 200 ரூபாய்  கள்ளநோட்டுகளும், கலர் ஜெராக்ஸ் மிஷின்களும் இருந்தன.

அந்த ஆறு பேரையும் காவல் நிலையம் ெகாண்டு வந்தனர்.  விசாரணையில், மணலி புதுநகரை சேர்ந்த யுவராஜ் (37), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (33), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இம்தியாஸ் (24), திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த ஜான் ஜோசப் (31), வியாசர்பாடி ரசூல்கான் (38), செங்குன்றம் முபாரக் (38) என்பதும், இவர்கள் நண்பர்கள் என்பதும் தெரிந்தது. இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ரசூல்கான் ஆலோசனையின் பேரில் கள்ளநோட்டு தயாரிக்க யுவராஜ் மற்றும் சக நண்பர்கள்  முடிவு செய்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணலி புதுநகரில் உள்ள ஆந்திராவை சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

பின்னர் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 2 கலர் ஜெராக்ஸ் மிஷின்கள், தரமான வெள்ளைக் காகிதத்தை வாங்கி 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புறநகர் பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக ரூபாய் 11 லட்சம் வரை யுவராஜ் செலவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு பிரிண்ட் செய்ய வேண்டும் என யுவராஜ் கூறியுள்ளார். அதற்கு 500 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுத்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என ரசூல்கான் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், நான் செலவுசெய்த பணத்தை கொடு என்று யுவராஜ் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் சமாதானம் செய்ய அங்குமிங்கும் நடந்துள்ளனர். இதனால்,  சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதும் தெரிய வந்தது.

பல லட்சம் புழக்கமா?: பிடிபட்ட 6 பேரும் இதுவரை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட வில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் 6 மாதமாக கள்ளநோட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பல லட்ச ரூபாய் அளவிற்கு நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்  தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து, அங்கு அச்சடித்து வைத்திருந்த பல லட்ச ரூபாய் கள்ளநோட்டுகள், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் வெள்ளை பேப்பர் பண்டல்கள்,  ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் முழுமையாக விசாரித்தால்தான் எவ்வளவு கள்ளநோட்டு ரூபாய் புழக்கத்தில் விட்டார்கள். இவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Manali New Town , Man arrested for renting a house in Manali New Town and printing counterfeit notes at gunpoint
× RELATED பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை...