திரிபுரா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாரின் தனிப்படை நடவடிக்கை

சென்னை: கல்லூரி மாணவர்களுக்காக திரிபுரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள பாதை மாத்திரைகளை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி கடந்த 28ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடைமுறைப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

வெளிமாநில மாணவர்கள் அதிகளவில் படித்து வருவதால் அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து உதவி ஆய்வாளர் சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்த திமோதி, பிரித்திவி, ஸ்ரீராம், ரோஹன் ஆகியோரை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து நண்பர்கள் வாங்கி வந்து தனித்தனியாக பிரித்து கல்லூரி மாணவர்களுக்கு ரயில் நிலையங்களிலும், ரயில் பயணம் செய்யும் போது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பிடிபட்ட நபர்கள் அளித்த தகவலின் படி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த ஹரீஷ், லோகேஷ், ரரேஷ் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த சச்சின், சரவணன், வாசு, ரகுமான், கவுஸ்ருதீன், யூசுப் ஆகியோரை பிடித்தது அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்ப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து அதிக போதை தரக்கூடிய 26 மாத்திரைகள், எல்எஸ்டி ஸ்டாம்பு 26, கிரிஸ்டல் ஒரு கிராம், 1,600 போதை மாத்திரைகள், 2 கிலோ கஞ்சா என ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை பொருட்கள் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ திட்டத்தின் கீழ் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 குற்றவாளிகள் கைது ெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.37,37,500 ரொக்கம், 175 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தகவல் அளித்தால் ₹10 ஆயிரம் பரிசு: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், குட்கா குறித்து 24 மணி நேரமும் 6379904848 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் அறிவித்துள்ளார். அப்படி தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும்.

தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல கஞ்சா கைப்பற்றப்பட்டால், தகவல் அறிவித்த நபருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பியுடன் தேநீர் அருந்த வாய்ப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகம், இதர கல்வி நிறுவனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் ‘எஸ்பி உடன் தேநீர்’ அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேநீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். மேலும், சம்பந்தப்ட்ட நபரின் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: