×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக ரூ.18.42 கோடியில் விடுதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக ₹18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினத்தில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதுபோல, செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகல்கேணியில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் களங்காணியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் திறந்து வைத்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதிக கட்டிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் என மொத்தம் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Tags : Adithravidar ,Chief Minister ,MK Stalin , 18.42 crore hostels for Adithravidar and tribal students: CM opens MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...