×

மாநில உரிமை-மொழி உரிமை காப்போம் இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக: தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் லோட்டஸ் என்கிற காலணி தயாரிப்புத் தொழிற்சாலைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து நான் அதிகம் பங்கேற்றது தொழிற்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்தான். அதிக முதலீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைவிட, குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பெரும் பயன் அளிக்கக்கூடியவை. அந்த வகையில், 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியதாக இந்தக் காலணித் தொழிற்சாலை அமையும்.  மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது, 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ‘வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, மதிப்பூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்துவதுடன், மக்கள் நலப் பணியாளர்கள் கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து மாதம் 2000 ரூபாய் கூடுதலாக, மொத்தம் 7000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தேன்.இனி அவர்களின் வேலை பறிபோகும் வகையில், ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழ்நாட்டு மக்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை நிறைவேற்றியுள்ளேன்.

எல்லாத் துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது போலவே கலைத்துறை -ஊடகம் ஆகியவற்றின் நலனிலும் கழக அரசு நிரம்ப அக்கறை கொண்டுள்ளது. அதனடிப்படையில் ஏப்ரல் 9ம் தேதி தென்னிந்திய ஊடகம் மற்றும் (கலை) பொழுதுபோக்கு மாநாட்டினைத் தொடங்கி வைத்தேன். அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையான மாநிலமாகத் திகழும் கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றேன்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதில், இந்தி பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது, நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியிருந்தது. அவரது கருத்துக்கு, கண்டனக் குரலை உங்களில் ஒருவனான நான் உடனடியாக எழுப்பியிருந்த நிலையில், கண்ணூர் மாநாட்டில் கேரளாவில் தாய்மொழியான மலையாளத்திலும், அதன்பின் தொடர்ச்சியாக நம் தாய்மொழியான தமிழிலும், இறுதியாக ஆங்கிலத்தில் முழங்கியும், மாநில உரிமைகளுக்கான குரலை உயர்த்தினேன்.

இந்திய அளவில் மாநில உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என்பதை எடுத்துரைத்தேன். பேரிடரை எதிர்கொள்வதிலும், மாநில உரிமைகளைக் காப்பதிலும், மக்களுக்கான நிர்வாகத்தை அளிப்பதிலும் எனக்கு முன்னோடியாக விளங்கும் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் மீதான மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தினேன். இந்திய அரசியலின் மையமாக நான் திகழ்வதாக கேரள முதல்வர் மனம் திறந்து எடுத்துரைத்தார்.

தமிழ்நாடுதான் என் தாயகம். தமிழ்நாட்டு மக்கள்தான் என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனான என் கவனம் முதன்மை பெறுவது, தமிழ்நாட்டின் மீதுதான். தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

கேரளாவிலிருந்து திரும்பிய எனக்கு ஞாயிறன்றும் ஓய்வில்லை. ஞாயிறு எனும் சூரியன் போலவே ஒவ்வொரு நாளும் ஒளிவீசிடும் அளவில் ஓயாது உழைப்பதன்றி வேறு பணி ஏது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்குத் தந்துள்ள ஆட்சிக்கான அடிப்படை இலக்கணம். அதன்படி, பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை மக்கள் முன் எடுத்துரைத்தேன். இன்று முதல் மீண்டும் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஒவ்வொன்றாகச் செய்கின்ற பணி தொடர்ந்து சீராக நிறைவேறும்.

தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை-மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக, தொடர்ந்து பாடுபடுவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும், சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை, வரலாறு ஏற்கும் வண்ணம், மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Indian Union ,Thimuka ,KKA Stalin , Let's Defend State Rights and Language Rights DMK is an unavoidable movement in the Indian Union: DMK leader MK Stalin's letter to volunteers
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...