×

மகராஜ் சுழலில் மூழ்கியது வங்கதேசம் தென் ஆப்ரிக்கா ஒயிட்வாஷ் அசத்தல்

போர்ட் எலிசபெத்: வங்கதேச அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 332 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம், முதலில் விளையாடிய ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அடுத்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 220 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 19 ஓவரில் 53 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், போர்ட் எலிசபெத்தில் கடந்த 8ம் தேதி தொடங்கிய 2வது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 453 ரன், வங்கதேசம் 217 ரன் எடுத்தன.

236 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 413 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 3ம் நாள் முடிவில் 9.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று விக்கெட் மளமளவென சரிய, வங்கதேசம் வெறும் 80 ரன்னில் சுருண்டது ( 23.3 ஓவர்). 4 வீரர்கள் டக் அவுட்டாயினர், 3 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 27 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 7, சிமோன் ஹார்மர் 3 விக்கெட் அள்ளினர். தென் ஆப்ரிக்கா 332 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை கேசவ் மகராஜ் தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவர் மொத்தம் 16 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Maharaj ,Bangladesh ,South Africa , Maharaj immersed in the whirlwind of Bangladesh South Africa whitewash astounding
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...