அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ள திருப்போரூர் ஒன்றியத்தில் பல்லுயிர் பூங்கா: சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது: உலக நாடுகளுடன் போட்டியிட்டு இன்றைக்கு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வென்றெடுத்து வந்து, அதை திருப்போரூர் தொகுதி மாமல்லபுரத்தில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருப்போரூர் வனச்சரகத்தை பொறுத்தவரை இள்ளலூர், மடையத்தூர், தண்டரை, மாம்பாக்கம், அம்மனம்பாக்கம், தயார், தையூர் உள்பட பல வனபகுதிகள் காப்பு காடுகளாக இருந்தாலும், அவை அனைத்தும் 5653.115 ஹெக்டேரில் அமைந்துள்ளது.

ஆனால், மிகப்பெரிய வனப்பகுதியாக காட்டூர் வனப்பகுதி இருந்து வருகிறது. இது 5,053 ஏக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அந்த பகுதிகளில் வனவிலங்குகளாக புள்ளி மான், புள்ளிவாய் மான், முள்ளம்பன்றி, உடும்பு, நரி போன்ற பல விலங்கினங்களும், பறவை இனங்களாக மயில்கள், மாங்குயில்கள், தேன்சிட்டு போன்ற கிட்டத்தட்ட 65 வகையான பறவைகள் இருக்கின்றன. அரியவகை செடிகள் அங்கு உள்ளன. அங்கு, ஒரு பல்லுயிர் பூங்கா அமைத்தால் சிறப்பாக இருக்கும். இதை தொடர்புடைய சுற்றுலா தலங்களாக கோவளம், முட்டுக்காடு, மாமல்லபுரம் போன்றவை உள்ளன. திருத்தலங்களாக திருவிடந்தை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மேல்மருவத்தூரும், வண்டலூரிலே அமைந்துள்ள உயிரியியல் பூங்காவுக்கும், வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு நிலவியல் ரீதியாக நடு மையத்தில் அமைந்திருக்கிறது.

எனவே, இங்கே ஒரு பல்லுயிர் பூங்கா அமைப்பது, என்பதை வெறுமனே சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமல்ல, அரசுக்கு வருவாய் ஈட்டும். உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி தரும். ஒட்டுமொத்தமாக மக்களுக்கான மனமகிழ்வை தரும். எனவே பல்லுயிர் பூங்காவை அமைத்து தர வேண்டும். இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளை அனுப்பி, பல்லூயிர் பூங்கா அமைக்க இடம், சூழல் ஆகியவை ஆய்வு செய்யப்படும். சரியான நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு, முதல்வரின் உத்தரவை பெற்று அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: