×

குடியாத்தம் அருகே பயங்கரம் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த வாலிபரை அடித்துக்கொன்று எரிப்பு: உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த வாலிபர் அடித்துக்கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கூடல் நகரைச் சேர்ந்தவர் ரவி. சைக்கிள் ரிப்பேர் கடை வைத்துள்ளார். இவரது மகன் அசோகா(33). இவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு ரேவதி(26) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. அசோகா வேலூர் தனியார் மருத்துவமனை மற்றும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 3 ஆண்டுகளாக வேலை செய்துள்ளார். ஆனால் தற்போது வேலையில் இல்லை. இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதை கைவிடும்படி பெற்றோர் மற்றும் மனைவி பலமுறை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அசோகா தொடர்ந்து விளையாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஆன்லைனில் ரம்மி விளையாடி 60 ஆயிரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. கணவரின் செயலால் மனவேதனை அடைந்த ரேவதி கோபித்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுதொடர்பாக அசோகாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு வாரமாக யாரும் பேசிக்கொள்வதில்லை. இதனால் தனிமையில் இருந்த அசோகா கடந்த வாரம் ஆன்லைனில் மீண்டும் ரம்மி விளையாடியுள்ளார். அப்போதும் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை அசோகா வீட்டின் பின்புறம் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அசோகாவின் சடலம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை  மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அசோகா சடலம் கிடந்த இடத்தில் அவரது செருப்பு, 2 கோணிப்பைகள் இருந்தது. அதனையும், வீட்டில் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அசோகாவை யாரோ அடித்து கொன்று கோணிப்பையில் திணித்து கொண்டு வந்து தீ வைத்து எரித்திருக்கலாம் என தெரிகிறது. அவரை கொன்று எரித்தது யார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது தந்தை ரவி, தாய் வசந்தி, அண்ணன் கலைச்செல்வன், அண்ணி ரேவதி மற்றும் உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Gudiyatham , Terrorist online rummy near Gudiyatham kills and burns lost teenager: Police investigate relatives
× RELATED கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை...