×

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்ஸ்டாகிராமில் காதல் வலை

* வேறொருவரின் போட்டோ பயன்படுத்தி மோசடி
* லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலம்
* திருமணமான ஆரணி வாலிபர் அதிரடி கைது

ஆரணி: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த ஆரணி வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(21). இவர், ஆரணியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். ஆரணி டவுன் சபாஷ்கான் தெருவைச் சேர்ந்தவர் பயாஸ்(24). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 வயதில் மகள் உள்ளனர். தற்போது பயாஸ் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜியுடன் பேஸ்புக் மூலம் பயாஸ் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து பயாஸ் சாட் செய்தபோது, பாலாஜியின் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் உள்ள போட்டோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பாலாஜி அழகாக இருந்ததால், அவரின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தான் பாலாஜி என்று அறிமுகமாகி, பல பெண்களுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து, பிரண்டாகியுள்ளார். ெதாடர்ந்து பாலாஜி போலவே பல பெண்களுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார்.  

இதில், பாலாஜி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது, அவரது போட்டோவை வைத்து வேறொருவர் புதியதாக கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே பேஸ்புக்கில் உள்ள செல்போன் நம்பரை வைத்து, தனது போட்டோவை பயன்படுத்துவது யார் என்று விசாரித்துள்ளார். அப்போது தான், அது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பது தெரியவந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு எச்சரித்ததும் சமூகவலைதளங்களில் இருந்த பாலாஜியின் போட்டோவை பயாஸ் அகற்றியுள்ளார்.

இதற்கிடையே, சில மாதங்களுக்குபின் மீண்டும் பயாஸ், பாலாஜியின் போட்டோவை பயன்படுத்தி சென்னை, திருப்பத்தூர், மதுரை, திருச்சி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ள இளம்பெண்களுடன் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் சாட் செய்து வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்களிடம் ஆடியோ கால் செய்து பேசியுள்ளார். அதில், பல பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பழகி பணம் பறித்துள்ளார். இந்நிலையில், பாலாஜி சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது தனது போட்டோவை மீண்டும் பயாஸ் பயன்படுத்தி பல பெண்களிடம் சாட் செய்து வருவது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பாலாஜி, பயாசை போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.  

திருப்பூரில் பணியாற்றி வந்த பயாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ஆரணிக்கு வந்துள்ளார். இதையறிந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்குச் சென்று பயாசின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயாஸ் புதிய கணக்குகள் தொடங்கி அதில் பாலாஜியின் போட்டோவை வைத்து பல பெண்களுடன் ஆபாசமாக சாட்டிங் செய்து பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள், பயாசை நேற்று முன்தினம் இரவு ஆரணி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாலாஜி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பயாசை கைது செய்து, ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் போளூர் சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பயாஸ், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் அனுப்பியும், காதல் வலை வீசியும் லட்சக்கணக்கில் பணம் பறித்தும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் எத்தனை பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஆபாச ஆடியோக்களை வைத்து மிரட்டல்
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களிடம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தான் செல்போன் மற்றும் மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதாகவும் அதற்கு பணம் தேவை என்று கூறியும், சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோக்களை பதிவு செய்து கொண்டு மிரட்டியும் பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. பல இளம்பெண்களிடம் லட்சங்களில் பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் இவர் போலியாக எத்தனை ஐடிக்களை பயன்படுத்தி வந்துள்ளார்? பெண்களை மிரட்டி சீரழித்துள்ளாரா? இவருடன் வேறு யாராவது கூட்டு சேர்ந்துள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka , Love web on Instagram for more than 100 women from Tamil Nadu, Andhra Pradesh and Karnataka
× RELATED தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு