×

ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு: கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்றபோது, தனது அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் இருந்த 24 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதங்களை வழங்கினர். ஏற்கனவே ஒரு அமைச்சர் இறந்து விட்டதால், 25 அமைச்சர் பதவிகள் காலியானது.

இதையடுத்து, பிரபல நடிகை ரோஜா உள்பட 15 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டது. பழைய அமைச்சர்கள் 10 பேருக்கு தொடர்ந்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ரோஜா உட்பட 25 பேருக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்்கப்பட்டுள்ளது.

* மாஜி பெண் அமைச்சர் ராஜினாமா
குண்டூர் மாவட்டம், பத்திப்பாடு எம்எல்ஏவாக உள்ள மேக்கதொட்டி சுச்சரிதா, ஜெகன்மோகன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மறு சீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதையறிந்த எம்பி மோபிதேவி வெங்கட்ரமணா நேற்று முன்தினம் நள்ளிரவில் சுச்சரிதா வீட்டிற்கு ஆறுதல் கூறச்சென்றார். அப்போது அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் மனவேதனை அடைந்ததாகவும், எனவே எம்எல்ஏ பதவியை தான் ராஜினாமா செய்து விடுவதாகவும் எம்பியிடம் சுச்சரிதா கூறியுள்ளார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார் என அவரது மகள் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Tags : Roja ,Andhra Pradesh , 25 ministers, including actress Roja, sworn in as governor of Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் மே 13ம் தேதி தேர்தல்...