மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் நிர்வாகியின் பிறந்த நாள் விழாவில் சிறுமிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து கூட்டு பலாத்காரம்: ரத்த போக்கு அதிகமானதால் உயிரிழந்த கொடூரம்

நாடியா: திரிணாமுல் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் பிறந்த நாளில் 14 வயது சிறுமிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து கூட்டுப் பலாத்காரம் செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலி சேர்ந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலா என்பவரின் மகன் பிரஜ்கோபால் கோலா (21). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், தனது பிறந்த நாளை கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடினார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியையும் அழைத்துள்ளார்.

அவரும் அவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். மதுபோதையில் இருந்த பிரஜ்கோபால் கோலா மற்றும் அவரது நண்பர்கள், அந்த சிறுமிக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அடுத்தடுத்து பலாத்காரம் செய்ததால், சிறுமிக்கு அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி, அடுத்த நாள் காலை உயிரிழந்தார். தங்களது மகள் திடீரென இறந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பிரஜ்கோபாலிடம் விசாரித்தனர்.

அவர், சிறுமியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அரசியல் தலைவரின் மகன் மற்றும் நிர்வாகி என்பதால், அவரது மிரட்டலுக்கு பயந்து சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் எரித்துவிட்டனர். கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பின்னர், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிறுமியின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஹன்ஸ்காலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிரஜ்கோபால் கோலா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்குப் பிறகு எங்களுக்குப் புகார் வந்தது. சிறுமியின் உடல் ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தகனம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376(2)(ஜி) (கும்பல் பலாத்காரம்),

302 (கொலை), 204 (ஆதாரங்களை மறைத்தல்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்டுப்பலாத்காரம் செய்த சில குற்றவாளிகள், சிறுமியின் உடலை தகனம் செய்த சுடுகாட்டில் பணிபுரிபவர் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.  பிரஜ்கோபால் கோலா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை மட்டும் கைது செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: