×

“தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்” -அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பாலிடெக்னிக் படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம். திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு UGC எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைத் தொடர UGC- உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். மணப்பாறை, செஞ்சி, அரவக்குறிச்சி, திருமயம்,ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 20,000 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் பயன் பெறுவர். 41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம்  பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும் இவ்வாறு கூறினார்.


Tags : Government Arts and Science Colleges ,Tamil Nadu ,Minister ,Ponmudi , '10 new government arts and science colleges will be started in Tamil Nadu' - Minister Ponmudi announcement
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...