×

ராஜஸ்தானில் பயங்கர சம்பவம்; ரவுடியின் திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு: ஆட்டம் போட்ட மற்றொரு ரவுடி குண்டு பாய்ந்து பலி

சிகார்: ராஜஸ்தானில் நடந்த ரவுடியின் திருமண விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆட்டம் போட்ட மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தான். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் கிர்தோலி என்ற கிராமத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான மணமகன் சங்ராம் சிங்கின் திருமண விழா அவனது வீட்டில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மற்றொரு ரவுடியும், துப்பாக்கிச் சுடும் வீரரான சுரேஷ் சேகாட் மற்றும் அவனது அடியாட்கள் வந்தனர்.

திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற்ற போது சுரேஷ் சேகாட் மற்றும் அவனது ஆட்கள் மேடையேறி ஆட்டம் போட்டனர். திடீரென தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த சுரேஷ் சேகாட், விழா மேடையில் மேல்நோக்கி சுட்டான். அதன்பின் மணமகன் சங்ராம் சிங் உள்ளிட்ட சிலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். திருமண விழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடைசியாக தன்னைத்தானே துப்பாக்கியால் ரவுடி சுரேஷ் சேகாட் சுட்டுக் கொண்டான்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை மீட்டு குச்சமான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றனர். ஆனால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரான ஷியாம் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணமகன் சங்ராம் சிங் உள்ளிட்ட மேலும் இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து நெச்வா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிமலா புடானியா கூறுகையில், ‘திருமண விழாவில் ஆட்டம் போட்ட ரவுடி சுரேஷ் சேகாட் திடீரென துப்பாக்கியால் கண்டபடி சுட்டான்.

பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான். இவ்விவகாரத்தில் மணமகன் உட்பட 5 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் சேகாட் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 குற்ற வழக்குகள் உள்ளன. மணமகன் சங்ராம் சிங் மீது ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளன. எதற்காக சுரேஷ் சேகாட் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Rajasthan ,Rowdy , Terrorist incident in Rajasthan; Rowdy's wedding shooting: Another rowdy bomber kills atom
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...