×

சோழிங்கநல்லூர் நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம்: எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தல்

சென்னை: சோழிங்கநல்லூர் நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அந்த தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் உதவி ஆணையர் அலுவலகம் கடந்த 2009, மார்ச் 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அன்றைய அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் மற்றும் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ ஆகியோரின் பெரு முயற்சியால் சோழிங்கநல்லூர் தொகுதியில் உதவி ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

அதுவும் இதுவரை வாடகை கட்டணத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. பிரதான சாலையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் போதிய இட வசதி இல்லாத சூழல் உள்ளது. 1 லட்சத்து 93 ஆயிரத்து 505 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சொந்த கட்டிடத்தில் கட்டித்தர வேண்டும். அமைச்சர்: வட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு சுமார் 30 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உதவி ஆணையர் அலுவலகம் கட்ட மாவட்ட கலெக்டர் சம்மதம் தெரிவித்தார். உடனடியாக உதவி ஆணையர் அலுவலகம் கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரவிந்த் ரமேஷ்: அமைச்சருக்கு நன்றி. சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 130 பொது விநியோக கடைகள் இயங்கிவருகின்றன. அதில் 29 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேலும் 199வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 1942 குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட கடையை இரண்டாக பிரிப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டும் இன்று வரை அந்தகடை பிரித்து வழங்குவதற்கான சூழல் இல்லாமல் உள்ளது. எனவே அதிக குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட பகுதியில் கடைகளை பிரித்து வழங்க வேண்டும்.
அமைச்சர்: சோழிங்கநல்லூர் தொகுதியில் 53 நியாய விலைக் கடைகள் 1000 முதல் 1500 குடும்ப அட்டைகளுடனும், 28 நியாய விலைக் கடைகள் 1500 முதல் 2 ஆயிரம் குடும்ப அட்டைகளுடனும் செயல்பட்டு வருகின்றன.

200 குடும்ப அட்டைகளுக்கு மேல் 23 நியாய கடைகள் செயல்பாட்டில் உள்ளன. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் 104 நியாய கடைகள் உள்ளன. அட்டைதாரர்களின் வசதிக்கேற்ப அருகிலேயே நியாய விலை கடைகள் அமையும் வண்ணம் முழுநேரக் கடைகளாகவும், பகுதி நேரக் கடைகளாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 199வது வட்டத்திற்குட்பட்ட நியாயவிலை கடை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சோழிங்கநல்லூர் மண்டல உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் 130 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 101 கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. 29 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. கூட்டுறவு துறையால் நடத்தப்படும் 120 நியாய விலை கடைகளில் 94 கட்டிடங்கள் சொந்த கட்டிடத்திலும், 26 கடைகள் வாடகை கட்டிடத்திலும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்திவரும் 9 நியாய விலைக் கடைகளில் 7 கடைகள் சொந்த கட்டிடத்திலும், 2 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுய உதவி குழு மூலமாக 1 நியாயவிலைக் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இவ்வாறு வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகள், அரசு நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கான கட்டிடங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக பகுதிகளை பொறுத்தவரை நிலங்கள் கிடைத்துள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே சோழிங்கநல்லூர் பகுதியில் உறுப்பினர் இடங்களை தேர்வு செய்து கொடுத்தால் அந்த இடங்களில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : Cholinganallur ,MLA ,Arvind Ramesh , Cholinganallur, fair price shop, own building
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...