கோயம்பேடு மார்க்கெட் பகுதி சாலையில் பிளாட்பார கடைகள் மீண்டும் முளைத்தது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் சாலையில் மீண்டும் பிளாட்பார கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில், 150க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் போடப்பட்டிருந்தது. இதன்காரணமாக அந்த சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்துவந்தனர். அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்றுவந்தது. இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி அங்காடி நிர்வாக அலுவலரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தனர்.

இதன்படி, அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள், கடந்த மாதம் 25ம்தேதி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இனிமேல் யாரும் பிளாட்பாரத்தில் கடைகள் அமைக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் மறுபடியும் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைத்துள்ளனர். அத்துடன் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை அனைத்தையும் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு கொடுக்கின்றனர்.

தற்போது பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘’கோயம்பேடு காய்கறி, பழ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்வதற்கு அங்காடி நிர்வாகக்குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் சாலையோர கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: