×

சாத்தான், செய்வினையில் இருந்து தப்பிக்க 40 நாட்கள் உணவருந்தாமல் இருந்த 2 பெண்கள் மீட்பு: மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி: திருச்சி அருகே சாத்தான் மற்றும் செய்வினையில் இருந்து தப்பித்து, கர்த்தரிடம் நித்திரையடைய 40 நாட்களாக உணவு அருந்தாமல் வீட்டுக்குள் கிடந்த 2 பெண்களை மீட்டு   மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேலமஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(57). திருமணமாகாதவர். பல ஆண்டுகளுக்கு முன் இறந்த இவரது அக்கா சவரியம்மாளின் மகள் மார்க்ரேட் அந்தோணியம்மாள்(30) இவருடன் வசித்து வருகிறார். மார்க்ரேட் பிஎஸ்சி, பிஎட் பட்டதாரி ஆவார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே வருவது இல்லை. வீட்டின் பின்புறம் துர்நாற்றம் அதிகம் வீசுவதாக அப்பகுதி மக்களிடமிருந்து புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து மணப்பாறை போலீசார், ஆரோக்கியம்மாளின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் எழுந்து உட்கார கூட முடியாத நிலையில் மெலிந்த தேகத்துடன் ஆரோக்கியம்மாள், மார்க்ரேட் அந்தோணியம்மாள் தரையில் படுத்திருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, மார்க்ரேட் அந்தோணியம்மாள் தாய் சவரியம்மாளின் ஆவி, சைத்தான் வடிவில் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

மேலும் மார்க்ரேட்டின் தந்தை ஆரோக்கியசாமி தங்களுக்கு செய்வினை செய்துள்ளதாகவும், தங்கள் மீதுள்ள அசுத்த ரத்தத்தை போக்கி, தூய ரத்தம் பெற புனித வெள்ளியன்று கர்த்தரிடம் நித்திரையடைய இருக்கிறோம். அதற்காக 40 நாட்கள் உணவு ஏதும் அருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்து கொண்டு நோன்பு இருப்பதாக மார்க்ரேட் கூறினார். மேலும் வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அறையின் ஒவ்வொரு மூலையிலும் மந்திரிக்கப்பட்டு மஞ்சள் பூசிய தேங்காய்கள் இரண்டு இரண்டாக வைக்கப்பட்டிருந்தன.

மார்க்ரேட், ஆரோக்கியம்மாளுக்கு ஆதரவாக இருந்து வந்த ஆரோக்கியம்மாளின் தம்பி மரிய அருளும் அதை உறுதிப்படுத்தினார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியம்மாள், மார்க்ரேட் அந்தோணியம்மாள் இருவரையும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Satan , Satan rescues 2 women who had not eaten for 40 days to escape the action: hospital treatment
× RELATED போதை பொருளுக்கு எதிராக போராட்டம்:...