×

உத்திரமேரூர் அருகே செல்வ விநாயகர் கோயிலில் பரபரப்பு ஐயப்பன் சிலை தலை துண்டிப்பு; நவக்கிரக சிலைகள் உடைப்பு

* கிராம மக்கள் கடும் அதிர்ச்சி
* மர்ம நபர்களுக்கு வலை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே செல்வ விநாயகர் கோயிலில் ஐயப்பன், நவக்கிரக சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
  உத்திரமேரூர் அடுத்த அம்மையப்ப நல்லூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு மூலவராக விநாயகர் வீற்றிருக்கிறார். வெளிப்பகுதியில் ஐயப்பன், நவக்கிரக சிலைகள், சிவன், நந்தி, பார்வதி, உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. கோயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் காலை, மாலையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அக்கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், கோயிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இந்த கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல பூசாரி, மூலவரான விநாயகரின் அறை கதவை திறந்து பூஜை செய்தார். மேலும் மற்ற சிலைகளுக்கும் பூஜை செய்தார். பக்தர்கள் வழிபாட்டுக்கு பிறகு இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று காலையில் வழக்கம் போல, கோயிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். கோயிலின் சுற்றுச்சுவர் கதவை திறந்து உள்ளே சென்றார்.

அங்கு, ஐயப்பன் சிலை உடைக்கப்பட்டு கழுத்து பகுதி தனியாக கிடந்தது. நவக்கிரகத்தில் உள்ள 4 சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் பூசாரி அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை கேள்விபட்டதும், கிராம மக்கள் திரண்டு வந்தனர். சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். போலீசார் வழக்கு பதிந்து, கோயில் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் யார், எதற்காக உடைத்தார்கள்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சிலைகள் உடைக்கப்பட்டு கிடக்கும் செய்தியை கேள்விபட்டதும் அதிர்ச்சியில் உறைந்து ஓடி வந்து பார்த்தோம். மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கோயிலுக்கு கேமரா பொருத்த வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். அதற்கு, ‘சிறிய கோயில்தானே, கேமரா எதற்கு’ என ஊரார் சார்பில் முடிவு செய்து பொருத்தவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு கேமரா பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Iyappan ,Selva Ganesha temple ,Uttiramerur , Uttiramerur, Iyappan statue, head, severed
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...