கோயில்களில் ஸ்ரீராம நவமி உற்சவம்-திரளான பக்தர்கள் தரிசனம்

வேலூர் : ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு வேலூர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.மகாவிஷ்ணு ராமனாக அவதரித்த நாளே ஸ்ரீராம நவமியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று ஸ்ரீராம நவமி நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தி உட்பட நாடு முழுவதும் உள்ள வைணவ தலங்களில் ஸ்ரீராம நவமியொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் ரங்காபுரம் கோதண்டராமர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாஜலபதி, வேலப்பாடி வரதராஜ பெருமாள், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீவெங்கடேச பெருமாள், கலாஸ்பாளையம் கோதண்டராம சுவாமி, அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள், மெயின் பஜார் ஹத்திராம் ஆஞ்சநேயர், வெங்கடேச பெருமாள், தொரப்பாடி வேங்கடகிருஷ்ணன், காட்பாடி கோபாலபுரம் வெங்கடேச பெருமாள், பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடந்தது.

மேலும் கல்புதூர் ஆஞ்சநேயர், மூலக்கசம் வீரஆஞ்சநேயர், வேலூர் பழைய மாநகராட்சி வீர ஆஞ்சநேயர், சேண்பாக்கம் பாலஆஞ்சநேயர், கொணவட்டம் வீர ஆஞ்சநேயர், திருமலைக்கோடி விஸ்வரூப ஆஞ்சநேயர், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் என அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும், ராமர் மற்றும் பாண்டுரங்கன் பஜனை கோயில்களிலும் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: