×

குடும்பங்களுடன் பொழுதுபோக்க சுத்தமல்லி அணைக்கட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பேட்டை : நெல்லையில் குடும்பத்துடன் பொழுதுபோக்க ஏதுவாக சுத்தமல்லி அணைக்கட்டு சுற்றுத்தலமாக மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மனிதர்கள் தங்களது அன்றாட தேவையை பூர்த்திசெய்ய ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இயந்திர உலகில் தனது பணிநேர பரபரப்பை குறைத்து மன இறுக்கத்தை தவிர்த்திட குடும்பங்களுடன் பொழுதுபோக்க அருவிகள், கடற்கரை, பூங்காக்கள்,  சுற்றுலா தலங்கள் என பொருளாதாரத்திற்கேற்றவாறு அவரவர் தேவைக்கேற்ப தேர்வு செய்து மனச்சோர்வினை போக்கி புத்துணர்ச்சி அடைகின்றனர்.

இந்நிலையில் நெல்லை அடுத்த  சுத்தமல்லி அணைக்கட்டு செழுமை மிகுந்த வயல் வெளிகளை ஒட்டியவாறு ரம்யாகவும், கம்பீரத்துடன் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில், சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவுக்கும் நீளமான அகன்ற கரையோர தடுப்பு கல்வெட்டு நடை பாதை பொதுமக்கள் நடப்பதற்க்கு ஏதுவாகவும், அமர்ந்து ரசித்திட, குளிக்க என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. இவைதவிர அணைக்கட்டு பகுதி முற்றிலும் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஆனந்த குளியல் போட்டிட மணல் திட்டுக்களால் நிறைந்தது ஆகும்.

அணைக்கட்டை தாண்டி ரீங்கார ஓசையுடன் ஆர்ப்பரித்து பாய்ந்தோடும் தண்ணீர் காண்போர் இதயத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். இப்பகுதிக்கு நெல்லை,தூத்துக்குடி உள்ளீட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குதூகலத்துடன்வந்து ஆனந்த குளியலிட்டு செல்கின்றனர். மாநகரின் நெருக்கியடித்த மக்கள் கூட்டம்,வெளியிடப்படும் கரியமில வாயு  போன்றவற்றிலிருந்து நிம்மதி மூச்சுவிட பசுமை நிறைந்த நீர்நிலைகளை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக உற்சாகமாக செல்வது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அணைக்கட்டு பகுதியில் ஆற்றினை ஒட்டிய குன்றின் மீது அமர்ந்து பார்த்தால்  பாய்ந்தோடும் ஆற்றின்அழகும் பச்சை பசேலென பரந்த வயல் வெளியும் ரம்யமாகக் காட்சியளிக்கும்.

இயற்கை எழில் கொஞ்சும் அழகை கண்டு மகிழ ஏராளமனோர் இங்கு வந்து செல்வதுடன் சிறந்த சினிமா சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இவ்வணைக்கட்டுக்கு செல்லும் சாலை சுருங்கியதாகவும் தரமற்ற நிலையிலும் உள்ளது.மேலும் வாகனங்கள் நிறுத்திட ஏதுவாக வாகன நிறுத்துமிடம், உணவருந்திட ஷெட், ஆடை அணியுமிடம், சாலையோர தெரு விளக்கு வசதி, ஆற்றின் இரு மருங்கிலும் படித்துறை போன்றவற்றை அரசு அமைத்து கொடுத்தால் நெல்லை மாநகர் மற்றும் சுற்று வட்டார மக்கள் இப்பகுதியை சிறந்த சுற்றுலாதலமாக பயன்படுத்தி கொள்வர்.

எனவே சுத்தமல்லி அணைக்கட்டிற்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை செய்துகொடுத்து சுற்றுலா தலமாக மாற்றிட அரசு தக்க நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

Tags : Chuttamalli Dam , Hood: Will the Chuttamalli Dam be converted into a roundabout to entertain the family in Nellai? As the public expects.
× RELATED தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்