ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்-வரும் 15ம் தேதி திருக்கல்யாணம்

திருமலை : ஒண்டமிட்டா கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், வருகிற 15ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்  புகழ்பெற்ற பழங்கால கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமநவமி அன்று வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்படும்.

இந்த பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். சீதா, ராமர், லட்சுமணர் நான்கு மாடவீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான பிரமோற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர மாநில அரசும் இணைந்து நடத்தி வருகிறது. அவ்வாறு  கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் முக்கோடி தேவதைகளுக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக கொடி ஏற்றினர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ‘ராமா ராமா’ என்ற பக்தியுடன் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தையொட்டி, கோயில் முழுவதும் ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான வருகிற 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) சீதா ராமர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், 2 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்று திருக்கல்யாணத்தை காணும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருக்கல்யாணத்தையொட்டி மாநில முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து திருக்கல்யாணத்தில் பங்கேற்க உள்ளார். இதேபோல், தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீராமநவமி உற்சவத்தையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ஏழுமலையான் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

பிரசாதங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் பிரமோற்சவத்தில் வருகிற 15ம் தேதி ஸ்ரீசீதா, ராமரின் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியது. முன்னதாக, கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் பிரசாதங்களை துணை செயல் அதிகாரி ரமணபிரசாத்திடம் வழங்கினார். அங்கிருந்து ஊர்வலமாக கல்யாண மேடை அருகே உள்ள யாத்திரிகள் சமூதாய கூடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அரிசி, மஞ்சள், நெய் ஆகியவற்றால் அட்சதையாக தயார் செய்து முத்து மற்றும் வளையல்கள், பிரசாத கயிரு ஆகிய அடங்கியவை பைகளில் செலுத்தி ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் தயார் செய்து வருகின்றனர். இதற்காக, 300 பேர் 2 லட்சம் பைகளை தயாரித்து வருகின்றனர்.

Related Stories: