×

இலங்கையில் இருந்து ஒரே இரவில் 19 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை-தொடரும் பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடிக்கு நள்ளிரவில் படகில் வந்த திரிகோணமலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 19 இலங்கை தமிழர்களை போலீசார் விசாரணை செய்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதா நெருக்கடி நிலவுகிறது. அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அங்கு வாழ வழியின்றி ஏராளமான தமிழர்கள் குடும்பம், குடும்பமாக ராமேஸ்வரம் வந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதியிலிருந்து ஒரு படகில் புறப்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட 10 பேரை, நேற்று முன்தினம் இரவில் தனுஷ்கோடி கடல் மணல் திட்டு பகுதியில் இறக்கி விட்டு சென்று விட்டனர். நேற்று காலை மீனவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து, இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இறக்கி விட்டனர்.

மரைன் போலீசார் குழந்தைகள் உட்பட 10 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் படகில் வந்திறங்கிய பத்து தமிழர்களும் திரிகோணமலையை சேர்ந்த நிரோசன் (28), இவரது மனைவி சுதா (34), இவர்களது பிள்ளைகள் விதுஷ்டிகா (13), அஜய் (10), அபிநயன் (2), மற்றும் டெலக்‌ஷன் (26), இவரது மனைவி டெக்‌ஷனா (21) மற்றும் கரன் (27), பரினா (24), சின்சிகா (5) என்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த நகை, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்று அதில் கிடைத்த பணத்தில் படகு கட்டணமாக ரூ.2 லட்சம் கொடுத்து இங்கு வந்ததாக தெரிவித்தனர்.

விசாரணையை தொடர்ந்து மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் மற்றொரு படகில் தலைமன்னாரில் இருந்து நேற்று முன்தினம் இரவில் புறப்பட்டு வந்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் நள்ளிரவில் கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளனர். நேற்று அதிகாலை கடற்கரையிலிருந்து உடமைகளுடன் நடந்தே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். பின்னர் ஆட்டோவில் ஏறி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் மண்டபத்திற்கு சென்றனர்.

போலீஸ் விசாரணையில், இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (38), இவரது மனைவி சுசிகலா (32), இவர்களது மகன்கள் திவாகரன் (12), நவீன் (11) மற்றும் கமலேந்திரன் (41), மைக்கேல் ஸ்கம்ஸ் (32), இக்னேஸ் மேரி (44), கோடீஸ்வரன் (26), இவரது மனைவி கஸ்தூரி (20) என்பது தெரிந்தது. இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் படகிற்கு கட்டணமாக ரூ.1.50 லட்சம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.போலீஸ் விசாரணைக்குப்பின் 9 பேரும் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மட்டும் 19 இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்திற்கு வருவதற்கு ஏராளமானவர்கள் காத்திருப்பதாகவும், படகிற்கு கொடுப்பதற்கு பணம் இல்லாததால் பலரும் இங்கு வரமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags : Tamilans ,Thanushkodi ,Sri Lanka ,Tamil Nadu , Rameswaram: Police are investigating 19 Sri Lankan Tamils from Trincomalee and Mullaitivu who arrived in a boat to Dhanushkodi at midnight.
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...