×

கோட்டக்குப்பம் ஓரின சேர்க்கை கொலையாளி கொலையில் 3 பேர் கைது-விசாரணையில் மேலும் ஒரு கொலை அம்பலம்

*திடுக்கிடும் தகவல்கள்

காலாப்பட்டு : புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பத்தில் ஓரின சேர்க்கை கொலையாளி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி மகன் அபினேஷ் (23). இவர் கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டில் நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்களை சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு, பின்னர் அவர்களை கொலை செய்து புதைத்துள்ளார்.

இதுதொடர்பாக அபினேஷை, மரக்காணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அபினேஷ் குடும்பத்தினர், நொச்சிக்குப்பம் வீட்டை காலி செய்துவிட்டு, கோட்டக்குப்பம் அடுத்த புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த அபினேஷ், சோதனைக்குப்பம் வந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு பகுதியில் அபினேஷ் தலை மற்றும் முகத்தில் பயங்கர காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. தகவலின் பேரில் கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அபினேஷ் ஏற்கனவே ஓரின சேர்க்கை கொலை வழக்கு குற்றவாளி என்பதால் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதற்கிடையே இக்கொலையை சோலை நகர், கோட்டக்குப்பம் பகுதிகளை சேர்ந்த 5 பேர் செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு தெருவை சேர்ந்த சதீஷ் (எ) தேசமுத்து (20), கோட்டக்குப்பம் ரகமத் நகரை சேர்ந்த அஜீத்ராஜ் (22), கோட்டக்குப்பம் அய்யனார் கோயில் மேட்டை சேர்ந்த அகமத் அசேன் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள், அபினேஷ் செய்த மேலும் ஒரு கொலையால் பழிக்குப்பழியாக எதிரிகள் தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:

சோலைநகர் வீட்டின் மேல்தளத்தில் மீனவரான விண்ணரசன், தனது மனைவி மற்றும் 7 வயது மகன் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். விண்ணரசனின் மகனிடம் அபினேஷ் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை மகன் மூலம் அறிந்த விண்ணரசன், தனது சித்தப்பா கலையரசனுடன் கடந்த 4ம் தேதி மதியம் அபினேஷ் வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகனிடம் தகாத முறையில் நடந்து கொண்டாய், இனிமேல் அப்படி நடக்காதே? என கூறியுள்ளனர்.

அதற்கு அபினேஷ், நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா? நான் யார் என உங்களுக்கு தெரியாது. என்கிட்ட வச்சிக்கிட்டா 2 பேரையும் கொன்னுடுவேன் என்று மிரட்டியுள்ளார். மறுநாள், 5ம் தேதி கலையரசன் என்பவர் சோலை நகர் கடலில் இறந்து கிடந்துள்ளார். அவரை அபினேஷ் தான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் இயற்கை மரணம் அல்லது உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்து, சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால், கலையரசன் சாவுக்கு அபினேஷ் தான் காரணம் என்பதை ஊரில் உள்ள சிலர் பேசியுள்ளனர். விண்ணரசனுக்கும், கலையரசனுக்கும் மச்சான் முறையான சதீஷ் என்ற தேசமுத்து என்பவர், அபினேஷை பழிக்குப்பழியாக கொல்ல வேண்டும் என சபதம் எடுத்துள்ளார். அதன்படி, கடந்த 8ம் தேதி தனது நண்பர்கள் அப்பு (எ) ஜவகர், அஜீத்ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து அபினேஷ் வீட்டுக்கு சென்று தேடினர். அப்போது வீட்டில் ஆள் இல்லாததால் திரும்ப மரைக்காயர் தோப்பு வழியாக வரும் போது, அங்கிருந்த அபினேஷை மேற்படி எதிரிகள் கத்தியால் தலை, கையில் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்படி திண்டிவனம் உதவி எஸ்.பி. அபிஷேக் குப்தா மேற்பார்வையில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகள் 3 பேரையும் நேற்று கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தலைமறைவாக உள்ள அப்பு, அரவிந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kottakkuppam , Execution: Police have arrested 3 people in connection with the murder of a gay killer at Kottakkuppam next to Pondicherry. Held by them
× RELATED கோட்டக்குப்பத்தில் வழிப்பறி ஆசாமிகள் 2 பேர் கைது