மேட்டுப்பாளையத்தில் பயங்கரம் குடிபோதையில் கத்திரிக்கோலால் டெய்லர் குத்திக் கொலை-அண்ணன் கைது

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாண்டி (53). டெய்லர். இவரது அண்ணன் சந்தானம் (55). லாரி டிரைவர். நேற்று முன்தினம் மாலை  பாண்டியன் தனது அண்ணன் சந்தானத்துடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் சந்தானம் அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பாண்டியனின் வயிறு, கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.

இதில் பாண்டியன் அலறி சத்தம்போட்டார். இதனையடுத்து  சந்தானம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் சின்னசாமி அங்கு வந்து பார்த்தார். அப்போது பாண்டியன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சின்னசாமி அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து பாண்டியனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன் சந்தானத்தை கைது செய்தனர்.

Related Stories: