×

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி : அமித்ஷாவின் பேச்சு பற்றிய கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

சென்னை : இந்தியை இணைப்பு மொழியாக ஏற்க வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு பற்றிய கேள்விக்கு தமிழ்தான் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் எல் முருகன் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஐகான் விருதை ஒன்றிய அமைச்சர் எல் முருகன் வழங்கினார்.

பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படங்களில் கறுப்பு நிறத்தவருக்கு சிறந்த கதா பாத்திரங்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், மலேசியாவில் சீனர் ஒருவரை சந்தித்த போது, வட இந்திய திரைப்படங்களை விரும்பி பார்ப்பதாகவும் வட இந்தியர்கள் நல்ல நிறத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். இது என்னை மிகவும் பாதித்தது. அவர் தென்னிந்திய திரைப்படங்களை பார்த்துள்ளாரா என்று எனக்குத் தோன்றியது. நம் திரைப்படங்களில் தென்னிந்தியர்களை குறிப்பாக கருப்பு நிறத்தவருக்கு கண்ணியமான சிறந்த பாத்திரங்களை அளிக்க வேண்டும்,என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்தி பற்றிய அமித்ஷாவின் கருத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் என்றார்.இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் கருத்து நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Tags : India ,Amitshah ,R. Rahman , Tamil, India, Language, Amitsha, A.R.Rahman
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா