காஞ்சிபுரம், ஏப்.11: காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
2021-2022 தமிழ்நாடு சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்திலிருந்து வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு சொந்தமாக வீடுகட்டுதல் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுதல் ஆகிய ஏதேனும் ஒரு வழிமுறையை தன்விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யலாம். பயனாளி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பதோடு விண்ணப்பிக்கும் நாளன்று புதுப்பித்தல் நடப்பில் இருக்க வேண்டும். பயனாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு (மனைவி, மணமாகாத குழந்தைகள்) வேறெங்கும் கான்கிரிட் வீடு எதுவும் சொந்தமாக இருக்கக்கூடாது. வேறு வீட்டுவசதி திட்டம் எதிலும் பயனடைந்து இருக்கக்கூடாது. பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.
சொந்தமாக வீடு கட்ட விரும்புபவர் எனில் குறைந்தபட்சம் 28 சதுர மீட்டர் அல்லது 300 சதுரஅடி மனை சொந்தமாக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது தொழிலாளி பெயருடன் குடும்ப உறுப்பினர் பெயரும் சேர்ந்த கூட்டு பட்டா இருத்தல் வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறும் முறையில் பயனாளிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், காஞ்சிபுரம் வட்டம், கீழ்க்கதிர்ப்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளிலிருந்து வீடு ஒதுக்கீடு செய்யப்படும். மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகைகளிலும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டுவசதி திட்ட உதவித் தொகையாக வழங்கப்படும்.
வீட்டுவசதி திட்டத்தின்கீழான உதவித்தொகை கோரும் விண்ணப்பத்துடன் தொழிலாளியின் வாரிய அடையாள அட்டை, ஆதார்அட்டை, குடும்பஅட்டை, பட்டா, வங்கி கணக்கு புத்தகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தொழிலாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அசலாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மேற்படி வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரால் (ச.பா.தி) உரிய முறையில் சரிப்பார்க்கப்பட்டு நிதி உதவி வழங்கப்படும். இந்த வீட்டு வசதி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரில் அணுகியோ பெற்று கொள்ளலாம்
