×

கார்கிவ், மரியுபோலில் தப்பிச் செல்லும் பொதுமக்களை தாக்கும் ரஷ்ய படை

கீவ்: கார்கிவ், மரியுபோல் நகரில் தொடர்ந்து பொதுமக்களை குறிவைத்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைனில் ரஷ்ய படையினர் தொடுத்துள்ள போர் 46வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் கிழக்கு உக்ரைனின் கிரமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய படையினர் ராக்கெட் குண்டுவீசி தாக்கினர். இதில், அந்நகரை விட்டு வெளியேற, ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 5 குழந்தைகள் உட்பட 52 பேர் பலியாயினர். இது ரஷ்யாவின் கொடூரமான போர் குற்றம் என உக்ரைனும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

ஆனாலும், ரஷ்ய படைகள் தொடர்ந்து பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று கார்கிவ், மரியுபோல் மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் குடியிருப்புகளை குறிவைத்து தாக்கின. கார்கிவ் டெர்ஹாக்கி நகரில் ரஷ்ய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நகரில் 66 சிறிய ரக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதே போல, போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் மனிதநேய வழித்தடங்களிலும் ரஷ்ய படையினர் நேற்று குண்டுவீசி உள்ளனர்.

இதனால், இவ்வழித்தடம் வழியாக மக்களை வெளியேற முடியாத நிலை இருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. தற்போது மரியுபோலில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை சிக்கி உள்ளனர். இதே போல் கிழக்கு உக்ரைனின் டொனெஸ்ட்க் பிராந்தியத்தின் வுக்லேடர், நோவோமிகைலோவ்கா நகரங்களில் குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் வெடித்து, 5 பொதுமக்கள் பலியாகினர்.

கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையத்தின் மீதான ராக்கெட் குண்டுவீச்சுக்குப் பிறகு, ரயில் மூலமாக மக்கள் வெளியேற அஞ்சுகின்றனர். இதனால் அதிகப்படியானோர் கார்களில் செல்கின்றனர். அதே சமயம், கார்கிவ்வின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் பீரங்கிகள் சுமார் 13 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

போரிஸ் ஆயுத உதவி
உக்ரைனின் தலைநகர் கிவ்வுக்கு நேற்று முன்தினம் திடீர் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், கிவ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இப்பயணத்தில் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு போரில் உதவ 120 கவச வாகனங்களையும், அதிநவீன போர்க்கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பையும், ரூ.1000 கோடி மதிப்பிலான உயர்ரக ராணுவ உபகரணங்களையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், உலக வங்கியிலிருந்து கூடுதலாக ரூ.3,750 கோடி கடனையும் பெற்றுத் தருவதாக ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

Tags : Kharkiv ,Mariupol , Kharkiv, Mariupol, Russian army
× RELATED உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி...