திருமங்கலம் அருகே தள்ளுமுள்ளு ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்: போலீஸ் தடியடியால் பரபரப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்புவேலிகளை உடைத்து காளைகளை மைதானத்தில் அவிழ்த்து விட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை போட்டி போட்டுக்கொண்டு வீரர்கள் அடக்க முயன்றனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சைக்கிள், பீரோ, தங்கக்காசு, கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பகல் 1.30 மணி வரையில் 400 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட அசெம்பிள் பாயிண்டில் உரிமையாளர்கள் சிலர் திடீரென மூங்கில் தடுப்புவேலிகள் மற்றும் பேரிகார்டுகளை உடைத்து காளைகளை உள்ளே நுழைத்தனர். இதில் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டை நிறுத்துவதாக ஆர்டிஓ அனிதா அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் கூட்டத்திற்குள் காளைகளை அவிழ்த்துவிட்டதால் அவை நாலாபுறமும் ஓடி, பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்தார். நிலைமை கட்டுமீறி போனதை கண்ட போலீசார் கூட்டத்தை கலைத்தனர். அப்போது சிலர் கற்களை மேடை நோக்கி வீசினர். கல்லடியிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேடையில் இருந்த திருமங்கலம் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தடுமாறி கீழே விழுந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு முடிவடைந்தது.

போலி டோக்கன் விநியோகம்

கரடிக்கல் ஜல்லிக்கட்டில் ஒரே எண்ணில் போலி டோக்கன் அதிகளவில் கொடுக்கப்பட்டதாக காளை வளர்ப்போர் புகார் தெரிவித்தனர். சிலர் டோக்கன்களை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். இதனால் அதிகளவில் காளைகள் வந்ததும், 400 மாடுகள் வரையில் அவிழ்க்க நீண்ட நேரம் பிடித்ததாகவும் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

Related Stories: