×

8 முறை குண்டாஸ், 80 வழக்குகள் பெண் சாராய வியாபாரி மீண்டும் கைது: கணவர் உட்பட மேலும் 6 பேரும் சுற்றிவளைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியை சேர்ந்த பெண் சாராய வியாபாரி, கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், நேதாஜி நகர், இந்திரா நகர், லாலாஏரி உள்ளிட்ட பகுதிகளிலும், வாணியம்பாடியில் உள்ள 36 வார்டுகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் சுமார் 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தவர் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் ஏற்கனவே 8 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் மீது சுமார் 80 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு முறை சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கள்ளச் சாராய வியாபாரத்தில் ஈடுபடுவார்.

இவரிடம் 100 பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பொதுமக்கள் கடந்த மாதம் 6ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டு, நேதாஜி நகர் பகுதியில் வீடு, வீடாகவும், பிற இடங்களிலும் பல்வேறு வகையில் இந்த சாராய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை திருவண்ணாமலையில் சாராய கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன், தங்குவதற்கு வீடு கொடுத்த பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Kundas , Kundas, cases, female liquor dealer, arrested
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...