இலங்கை கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுக்க ரூ.2 கோடி கேட்பதா? எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 23ம் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களின் சிறைக்காவலை தொடர்ந்து 2 முறை(மே 12 வரை) நீட்டித்து உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிமன்றம், இடைப்பட்ட நாட்களில் மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு மீனவருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு  ரூ.7,500 கோடி கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையில், சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பல கோடி ரூபாய் பணம் கட்ட வேண்டும் என கூறுவது வேதனையான ஒன்றாகும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தும் உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: