×

பிட்காயின் மோசடி விசாரணை அமெரிக்க போலீஸ் வருகையா? சிபிஐ மறுப்பு

புதுடெல்லி: பிட்காயின் மோசடி குறித்து அமெரிக்க புலனாய்வு குழு இந்தியாவில் விசாரணை நடத்த வந்துள்ளதாக  கூறப்படுவதை சிபிஐ மறுத்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜ தலைவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது,’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘பிட்காயின் விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் நடத்துகிறது. இது தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் உரிய விசாரணை அமைப்புகளிடம் அவற்றை கொடுக்கலாம்,’ என்று சவால் விட்டார்.

ஆனாலும், பிட்காயின் விவகாரம் ஓய்ந்ததாக தெரியவில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிடுகையில், ‘பிட்காயின் மோசடி நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினேன். மிக பெரிய மோசடியை கர்நாடக அரசு மறைப்பதால் அமெரிக்க புலனாய்வு குழு (எப்பிஐ) இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த மோசடி குறித்த விசாரணை, அதில் தொடர்புடைய நபர்கள் குறித்து  தகவல்களை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கும் இதுவரை பதில் வரவில்லை,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘பல்லாயிரம் கோடி  பிட்காயின் மோசடி குறித்து விசாரிக்க அமெரிக்க புலனாய்வு குழு(எப்பிஐ) டெல்லி வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டால் மாநில பாஜ தலைவர்கள் பலரின் தலை  உருளும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி கூறுகையில், ‘பிட்காயின் மோசடி குறித்து விசாரிக்க எப்பிஐ குழு எதுவும் இந்தியாவுக்கு வரவில்லை. அதே போல் இந்த விசாரணைக்காக சிபிஐ.யிடமும் எப்பிஐ அனுமதி கோரவில்லை,’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : US ,CBI , Will US police investigate Bitcoin fraud? CBI denial
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது