×

திருச்சூர் அருகே இன்று காலை பரபரப்பு: தாய், தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மகன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே இன்று காலை தாய், தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெள்ளிக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் குட்டன் (60). அவரது மனைவி சந்திரிகா (55). இந்த தம்பதியின் மகன் அனீஷ் (30). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோருடன் அடிக்கடி அனீஷ் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இன்று காலையும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலை சுமார் 9 மணி அளவில் குட்டனும், சந்திரிகாவும் வீட்டுக்கு வெளியே புல் அறுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுடன் தகராறு செய்த அனீஷ், திடீரென வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து 2 பேரையும் வெட்டுவதற்காக விரைந்து வந்தார். அனீஷிடமிருந்து  தப்பிப்பதற்காக 2 பேரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் அவர்களை விரட்டி சென்ற அனீஷ் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குட்டனும், சந்திரிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து போலீசுக்கு போன் செய்த அனீஷ், பெற்றோரை வெட்டிக் கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு பைக்கில் வெளியே சென்று விட்டார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதன் பிறகு 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தப்பி ஓடிய அனீஷை தேடி வருகின்றனர்.

Tags : Tiruchur , A riot broke out near Thrissur this morning: the mother, the son who chased the father away and murdered him
× RELATED கேரள மாநிலம் திருச்சூரில் கிணற்றில்...