பயணிகளோடு பயணியாக குதிரையை ரயிலில் அழைத்து சென்றவர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயணிகளோடு பயணியாக குதிரையை அழைத்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் சீல்டா - டயமண்ட் துறைமுகம் இடையிலான லோக்கல் ரயிலில், பயணிகளோடு பயணிகளாக குதிரை ஒன்று பயணம் செய்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. ரயில்வே சட்டத்தின்படி, இதுபோன்று விலங்கினங்களை ரயிலில் அழைத்து செல்வது குற்றம் என்பதால், லோக்கல் ரயிலில் குதிரையை அழைத்து சென்ற நபர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கபூர் அலி முல்லா (40) என்பவர் ரயிலில் குதிரையை அழைத்து சென்றது தெரியவந்தது.

இவர் தனது குதிரையை தெற்கு துர்காபூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ள நேத்ராவுக்கு ரயில் அழைத்துச் சென்றதும், பந்தயத்திற்கு குதிரை அழைத்து சென்று திரும்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் எக்லவ்யா சக்ரவர்த்தி கூறுகையில், ‘ரயில்வே சொத்துக்களில் முட்டாள்தனமான செயலைச் செய்ததற்காகவும், ரயிலில் அனுமதியின்றி பயணிகளின் இடத்தை ஆக்கிரமித்ததற்காகவும், குற்றம்சாட்டப்பட்ட கபூர் அலி முல்லா மீது ரயில்வே சட்டத்தின்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தற்போது கைது செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: