அபிஷேக் ஷர்மா அபார ஆட்டம் சன்ரைசர்சுக்கு முதல் வெற்றி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் அபாரமான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். உத்தப்பா, ருதுராஜ் இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். உத்தப்பா 15 ரன், ருதுராஜ் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மொயீன் - ராயுடு ஜோடி 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. ராயுடு 27 ரன், மொயீன் 48 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர்.

துபே, தோனி தலா 3 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை கேப்டன் ஜடேஜா 23 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி புவனேஷ்வர் வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார். சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. பிராவோ 8, ஜார்டன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 2, புவனேஷ்வர், மார்கோ, மார்க்ரம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. அபிஷேக் ஷர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 89 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அபிஷேக் 32 பந்தில் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் 32 ரன் எடுத்து (40 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) முகேஷ் பந்துவீச்சில் மொயீன் வசம் பிடிபட்டார். அடுத்து அபிஷேக்குடன் ராகுல் திரிபாதி இணைந்தார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு சென்னை பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தது. அபிஷேக் 75 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் ஜார்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. திரிபாதி 39 ரன் (15 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் பூரன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அபிஷேக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: