4 நாள் மழை நீடிக்கும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் எனவும், டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதன்படி நேற்று தென் தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்தது. அதேபோல் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் வெப்பநிலையும் அதிகரித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.5, வேலூர் 37.5, மதுரை மாநகரம் 37.5, திருத்தணி 37.3, சேலம் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஊட்டியில் 10.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இடி, மின்னலுடன் கூடிய  கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். அதேபோல் நாளை தென் தமிழகம், திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் வருகிற 12ம் தேதி தென் தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வருகிற 13ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: