×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 8 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கட்டிடங்கள்: விரைந்து திறக்க கோரிக்கை

திருப்போரூர்:  சென்னைக்கு அருகே திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களுள் ஒன்றான கந்தசுவாமி கோயில் உள்ளது. அறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள், இந்த ஒரு கோயிலுக்கு வந்து வணங்கினால், அறுபடை வீடுகளுக்கும் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். முடிகாணிக்கை, பிரசாதக்கடை, வாகன நிறுத்தம், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு கட்டணங்கள் மூலமாக இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ.4 கோடி வருவாய் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும், திருமணம் நடத்துவதற்கும் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக இந்துசமய அறநிலையத் துறைக்கு, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் நெம்மேலி சாலையில் ரூ.95 லட்சத்தில் திருமணம் மண்டபம், ரூ.53 லட்சத்தில் பக்தர்கள் ஓய்வு விடுதி, ரூ.60 லட்சத்தில் பக்தர்கள் ஓய்வுக்கூட வளாகம் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. ஆனால், 8 ஆண்டுகள் முடிந்தும் பல காரணங்களை கூறி கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுக்கூடம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகிய கட்டிடங்கள் இதுவரை திறக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு, திருப்போரூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு இதற்கு கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2.38 கோடியில் கட்டப்பட்ட பக்தர்களுக்கான கட்டிடங்களை திறக்கவும், அந்த கட்டிடங்களில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறைகள், சமையல் கூடம், உணவு பரிமாறும் நாற்காலிகள், டேபிள்கள் ஆகியவற்றை வாங்கி பொருத்தவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 6 மாதமாக இப்பணிகள் நடைபெற்று தற்போது பெயர் பலகையும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஆனால் இதுவரை கட்டிடங்கள் திறக்கப்படாததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் 16 கால் மண்டபத்திலும், மாட வீதிகளில் உள்ள சத்திரங்களிலும் படுத்து உறங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அறநிலையத்துறை இந்த கட்டிடங்களை பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தும் வகையில் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு, ரூ.2.38 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்கவும், கழிப்பறைகள், சமையல் கூடம், உணவு பரிமாறும் நாற்காலிகள், டேபிள்கள் ஆகியவற்றை சீரமைக்க உத்தரவிட்டார்.

* ஆதீன சின்ன மடத்தை சீரமைக்க கோரிக்கை
கோயிலை ஒட்டி திருப்போரூர் ஆதீனம் தங்கிய சின்ன மடம் மற்றும் கோயில் அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. தற்போது தங்கும் விடுதி கட்டிடத்தில் தற்காலிகமாக கோயில் அலுவலகம் செயல்படுகிறது. திருப்போரூர் கோயில் ஆதீனம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுற்ற உடன், புதிய ஆதீனம் நியமிக்கப்பட உள்ளார். அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. எனவே, புதிய ஆதீனம் தங்கும் வகையில், அவருக்குரிய கோயிலுக்கு அருகே சின்ன மடம் கட்டிடத்தை புதுப்பித்து கட்டித்தர வேண்டும். அதையொட்டி உள்ள இடத்தில் கோயில் அலுவலகக் கட்டிடம் கட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruporur Kandaswamy Temple , Boutique buildings at Thiruporur Kandaswamy Temple for 8 years: Request to open soon
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயில்...