×

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மின் கோளாறால் மாணவிகள் அவதி: பெற்றோர்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கடி ஏற்படும் மின் கோளாறால், மாணவிகள் அவதியடைகின்றனர். கோடை காலம் என்பதால் உடனே சீர்  செய்து தரும்படி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  6 முதல் 12ம் வகுப்பு வரை  1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியில் உள்ளனர். கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்து, மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

அப்போது,  பள்ளியில் உள்ள பல மின்வயர்கள் எலியால் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து தற்காலிகமாக மின்வயர்கள் மற்றும் உபகரணங்கள் மாற்றப்பட்டு பள்ளி செயல்பட்டது. இந்தாண்டு மீண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பராமரிப்பின்றி இருந்தன. மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளியில் உள்ள ஆய்வகம், வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை ஆகியவற்றில் மீண்டும் மின் இணைப்புகளில் கோளாறு ஏற்பட்டு மின் விளக்குகள், மின் விசிறிகள் இயங்காத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளி முழுவதும் ஆய்வு செய்ததில், பல இடங்களில் மின் வயர்கள், மின் உபகரணங்கள் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே,  பள்ளி வளாகம் முழுவதும் புதிய மின் வயர்கள், மின் உபகரணங்கள் பொருத்தக் கேட்டு பொதுப்பணித்துறைக்கு  அறிவிப்பு அனுப்பப்பட்டது.  அதன்பேரில், அதிகாரிகள் ஆய்வு செய்து ரூ.1 லட்சம் மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் அனுப்பினர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டதால், இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த 4 மாதங்களாக சில வகுப்பறைகளில் மின்சாரத்துடனும், பல வகுப்பறைகளில் மின்சார வசதி இல்லாமலும் உள்ளது.

தற்போது, கோடை காலம் என்பதால் மாணவிகள் அனைவரும் குறைந்த ஒளியில் மின்விசிறி வசதி இல்லாமல் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையெட்டி, அவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் நிலை, உருவாகி உள்ளது.
எனவே, மாவட்டப் பொதுப்பணித்துறை நிர்வாகம் திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு புதிய மின்வயர்கள் மற்றும் மின் உபகரணங்கள் பொருத்தும் பணியை விரைவாக மேற்கொண்டு, மாணவிகள் சிரமம் இல்லாமல் கல்வி பயில உதவ வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Government Girls 'High School , Students suffering from power outage at Government Girls 'High School: Parents' Request
× RELATED அரசு மேல்நிலைப் பள்ளிகளில்...