×

அந்தமான் கடல் பகுதியில் போதைப்பொருளுடன் சுற்றிய ஈரான் கப்பலில் 11 பேர் கைது: கடலோர காவல் படை அதிரடி

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் போதைப் பொருட்களுடன் சுற்றிய ஈரான் கப்பலில் இருந்த 11 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை காசிமேடு துறைமுகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமான் கடல் பகுதிகளில் கப்பல்களில் போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்தமான் பகுதியில் சுற்றிய ஈரான் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர்.

அதில், போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக  கப்பலில் இருந்த 11 பேரை காசிமேடு மீன்பிடி  துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு  தகவல் கொடுத்து மோப்ப நாய்களை வரவழைத்து வெடிகுண்டு பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளனவா என கப்பலை முற்றிலும் சோதனை செய்தனர். அதில், போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து தொடர்ந்து அவர்களிடம்  விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் 11 ஈரான் நபர்களையும் கைது செய்து கடலோர காவல்படைக்கு சொந்தமான வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்றனர்.

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். போதைப்பொருட்களையும் ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜிதேந்தர்  தலைமையில் வந்த அதிகாரிகளிடம் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், பிடிபட்டவர்கள் யார் யார், என்னென்ன போதைப்பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது, அவை எத்தனை கிலோ என்பது தொடர்பாக எந்த தகவலையும் ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த கப்பலை சுற்றி மீன்பிடி துறைமுக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த கப்பல்  மீன் பிடிக்க கூடியது  இல்லை. கப்பலின் உயரம் அதிகமாக உள்ளது. இது கடத்தலுக்கு பயன்படுத்திய கப்பல் போல் உள்ளது என்றனர்.

Tags : Andaman Sea , 11 arrested on Iranian ship carrying drugs in Andaman Sea: Coast Guard operation
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...