ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ரூ.60 லட்சம் அதிரடி பறிமுதல்: ஹவாலா பணமா விசாரணை

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.60 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என விசாரித்து வருகின்றனர். ஓட்டேரி பட்டாளம் பென்ஷனர் லைன் பகுதியில் நேற்று காலை ஓட்டேரி  இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா  தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மடக்கி, அதில் இருந்த இருவரிடம் விசாரிக்க, ஆட்டோவில் இருந்து கீழே இறங்கும்படி கூறினர். உடனே அவர்கள் தங்களிடம் இருந்த பையுடன், அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். போலீசார் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

இதனால், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், தெலங்கானா மாநிலம், கம்பம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் (46) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் (20) என்பது தெரியவந்தது. இவர்கள்,  தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் சவுகார்பேட்டை செல்வதாகவும்,  தங்க நகை வாங்க வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் கொண்டுவந்த பணத்தை எண்ணியபோது அதில் 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர், ஓட்டேரி  காவல் நிலையம் வந்து, பிடிபட்ட இருவரையும் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: