மார்த்தாண்டம் அருகே ஆபாச படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம் ராணுவ வீரர் கைது: 3 மாதத்துக்குப்பின் சிக்கினார்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே பண உதவி செய்வதாக கூறி, மாணவியுடன் பழகி அவரை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராணுவ வீரர் 3 மாதத்துக்குப்பின் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இதில் சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டாததால் இளம்பெண்ணுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தோழிகள் மூலம் மேல்பாலை குழியோல்விளை பகுதியை சேர்ந்த சஜித் (30) என்பவரிடம் பணம் கடனாக கேட்டார்.

ராணுவ வீரரான சஜித், விடுமுறையில் ஊருக்கு வந்தார்.  பணம் தந்து உதவுவதாக கூறி மாணவியுடன் சஜித் பழக தொடங்கினார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் பேசினார். தனது ஆசைப்படி நடந்து கொண்டால் பணம் கிடைக்கும் என கூறி மாணவியை ஆபாசமாக நிற்க வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் இதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி மாணவியை தனிமையில் அழைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தனது நண்பர்களுக்கும் இந்த வீடியோவை காட்டினார். அவர்களும் தங்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை மிரட்டினர்.

இதையடுத்து மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து சஜித்தின் நண்பர்கள் ஜாண் பிரிட்டோ, மேல்பாலை பகுதியை சேர்ந்த கிரீஷ் (29), லிபின் ஜாண் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சஜித்தை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம்  ராணுவ வீரர் சஜித் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: