ஈரோடு தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி 3வது திருமணம் செய்த நெல்லை `கல்யாண ராணி’:15 நாட்களில் ரூ.1 லட்சத்துடன் ஓட்டம்; பஸ் நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டை

நெல்லை: ஈரோடு தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி 3வதாக திருமணம் செய்த நெல்லை கல்யாணராணி, 15 நாளில் ரூ.1 லட்சத்துடன் தப்ப முயன்றர். இருவரும் பஸ் நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே குள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதையடுத்து புரோக்கர்கள் மூலம் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டார்.

இவருக்கு ஈரோடு பகுதியை சேர்ந்த பெண் புரோக்கர், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் புரோக்கரிடம் தகவல் தெரிவித்தார். அவரது ஏற்பாட்டின்படி பாளையங்கோட்டை, முப்பிடாதியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணை ஈரோட்டிற்கு அழைத்து சென்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோயிலில் வைத்து கதிர்வேல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு ‘‘வாக்கிங்’’ செல்வதாகக் கூறி விட்டு சென்ற அப்பெண், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கதிர்வேல் மற்றும் உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடினர். வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு பாளையங்கோட்டைக்கு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கதிர்வேல் மற்றும் அவரது உறவினர்கள், நேற்று பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வந்திறங்கினர். தகவலறிந்து பெண் புரோக்கர், அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு புதிய பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு கதிர்வேலுக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும், மூத்த மகள் சென்னை சட்டக்கல்லூரியிலும், மற்றொரு மகள் நெல்லை நர்சிங் கல்லூரியிலும் படிப்பதும், முதல் கணவரை விவாகரத்து செய்திருப்பதும், மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வதும், மூன்றாவதாக கதிர்வேலை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைப்பற்றி கதிர்வேல் கேட்டதும் 2 பேரும் பஸ் நிலையத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். புறக்காவல் நிலைய போலீசார் இருவரையும் மீட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். 2 தரப்பினரும், பெண்ணின் 2 மகள்களும் வந்தனர். பின்னர் கதிர்வேல், ‘‘திருமணமாகவில்லை என்று கூறி அந்தப் பெண் என்னை ஏமாற்றிவிட்டார். வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.1 லட்சத்தை திருப்பித் தந்தால் போதும்” என்று போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் போலீசார் இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் நெல்லை, பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: